Showing posts with label நெல்சன் மண்டேலா. Show all posts
Showing posts with label நெல்சன் மண்டேலா. Show all posts

Thursday, July 24, 2008

நெல்சன் மண்டேலாவுக்கு அமைதிக்கான காந்தி விருது



அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.
விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.
மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.